மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் போக்குவரத்து நெரிசல்

திருத்துறைப்பூண்டியில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, இந்த பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-08-21 18:21 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி செல்ல புறவழிச்சாலை கிடையாது. திருவாரூர் சாலையில் பல கிலோமீட்டர் தூரம் சென்று விளக்குடி பகுதியை அடைந்தால்தான் புறவழிச்சாலையை அடைய முடியும். இதனால், பெரும்பாலான வாகனங்கள் நகரத்தின் உள்ளே சென்று வருகின்றன. இந்தநிலையில் இங்குள்ள ெரயில்வே கேட் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் காரணமாக சாலையின் ஒருபுறம் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு மறுபுறம் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல்

இந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ரெயில்வே கேட் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்கள் இந்த இடத்தை கடந்து செல்ல பல மணி நேரம் ஆகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சுற்றுலா தலமான வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர் மற்றும் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம், புகழ்பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

விரைந்து முடிக்க வேண்டும்

போக்குவரத்து போலீசார் மிகுந்த சிரமங்களுக்கு இடையே போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர். ஆகவே, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்