தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் மேம்பாலத்தில் பணிகள் காரணமாக போக்குவரத்துக்கு தடை

தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் மேம்பாலத்தில் பணிகள் காரணமாக போக்குவரத்துக்கு தடை

Update: 2022-12-22 20:01 GMT

தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் மேம்பாலத்தில் பணிகள் காரணமாக போக்குவரத்துக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

சாந்தப்பிள்ளைகேட் மேம்பாலம்

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மழைகாலத்தில் தண்ணீர் தேங்குவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து சாந்தப்பிள்ளைகேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வழியாக நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து வரும் பஸ்கள், வாகனங்கள் தஞ்சை நகருக்குள் வந்து சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் வழியாக புதிய பஸ் நிலையம் சென்று வந்தன.

போக்குவரத்துக்கு தடை

இதே போல் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் இந்த வழியாக சென்று வந்தன. இந்த நிலையில் பாலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நேற்று முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாதவாறு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் பாலத்துக்கு ஏறும் இடத்தில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.

மேலும் தொம்பன்குடிசை பகுதியில் போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை மாற்றி விட்டனர். இதனால் மாலை நேரத்தில் தொம்பன்குடிசை பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்தனர். இதனால் அரை மணி நேரத்துக்குப்பிறகு போக்குவரத்து சீரானது.

4 நாட்கள் பணி

பாலத்தில் போக்குவரத்துக்கு தடை குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது அவர் கூறுகையில், சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனால் போக்குவரத்துக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டு போக்குரத்து வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் போக்குவரத்து மேம்பாலம் வழியாக செயல்படும். அதுவரை மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது"என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்