கொடைக்கானலில் மலைப்பாதையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் மலைப்பாதையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சாரல் மழை பெய்தது. இந்த மழை இன்று அதிகாலை வரை விட்டுவிட்டு பெய்தது. மழையுடன் வீசிய பலத்த காற்றால் கொடைக்கானலில் இருந்து மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் கோஷன் மலைப்பாதையில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மலைப்பாதையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.