மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் பலத்த மழை பெய்தது. மலைப்பாதையில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்,
குன்னூரில் பலத்த மழை பெய்தது. மலைப்பாதையில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. குன்னூரில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை 9.20 மணி முதல் குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே நந்தகோபால பாலம் பகுதியில் ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் மலைபாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கோத்தகிரி மார்க்கெட்டில் வழிந்தோடிய வெள்ளம் தாழ்வான இடங்களில் உள்ள கடைகளுக்குள் புகுந்து தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்கள் கடைக்குள் தேங்கி நின்ற தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு அருகே கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வழிந்தோட முடியாமல் 2 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது. இந்த மழைநீர் காய்கறி கடைக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் கால்வாய் அடைப்பை நீக்கி, தண்ணீர் வழிந்தோட வழி ஏற்படுத்தினர்.
மழையளவு
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-23, கிளன்மார்கன்-11, குந்தா, அவலாஞ்சி-16, கெத்தை, கிண்ணக்கொரை-15, அப்பர்பவானி-20, குன்னூர்-18, பர்லியார்-23, கோத்தகிரி-22, கோடநாடு-25, கீழ்கோத்தகிரி-11 மழை பதிவானது.