மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டியில் பலத்த மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பந்தலூரில் வீடு இடிந்து விழுந்தது.

Update: 2022-09-09 15:07 GMT

ஊட்டி, 

ஊட்டியில் பலத்த மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பந்தலூரில் வீடு இடிந்து விழுந்தது.

மரம் விழுந்தது

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்கிறது. சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலையோர மண் ஈரப்பதமாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று ஊட்டியில் உள்ள தமிழகம் சாலையில் காய்ந்த மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த சமயம் சாலையில் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். மழை காரணமாக ஊட்டியில் குளிர் நிலவுகிறது. மேலும் சாலையோரம் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வீடு இடிந்தது

பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி, வெள்ளேரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையோரங்களில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. பழுதடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் எருமாடு அருகே கப்பாலா ஆதிவாசி காலனியில் பலத்த மழை காரணமாக ரவி என்பவரது வீடு இடிந்து விழுந்தது.

அப்போது வீட்டில் சமையல் செய்தவர் அங்கிருந்து சென்றதால், காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த சேரங்கோடு ஊராட்சி துணைத்தலைவர் சந்திரபோஸ் மற்றும் வருவாய்த்துறையினர் இடிந்த வீட்டை நேரில் பார்வையிட்டனர். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்