பாரம்பரிய உணவு திருவிழா
கள்ளக்குறிச்சியில் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி அரங்கை கலெக்டர் திறந்து வைத்தார்;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் பாரம்பரியமான சிறுதானிய உணவுகளை உண்டு, மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போது மக்கள் துரித உணவுகளை உண்டு, ஆரோக்கியமின்றி, வாழ்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பாரம்பரிய விழா நடைபெறுகிறது. பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இவ்விழா நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம் தாய் சேய் இறப்புகளை குறைத்தல், அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைத்திட உறுதி செய்தல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்துதல் ஆகும். பொதுமக்கள் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.