கீரனூரில் 5 ரூபாய் நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுப்பு
கீரனூர் கடைகளில் 5 ரூபாய் நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகள் எளிதில் சேதமடைந்து விடுவதாலும், கள்ளநோட்டு உள்ளிட்ட பிரச்சினைகளாலும் ரிசர்வ் வங்கி 10, 5, 2, 1 ரூபாய் நாணயங்களை அதிகளவில் புழக்கத்தில் விட்டது. இதேபோல் 5, 2, 1 நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும் தற்போது அதிகளவில் புழக்கத்தில் இல்லை. மேலும் 5 ரூபாய் நாணயங்கள் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதால் பழைய 5 ரூபாய் நோட்டுகளை கீரனூர் கடைகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்க மறுக்கிறார்கள். ஒரு காலத்தில் 5 ரூபாய் நோட்டில் 5 மயில்கள் படம் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் கிடைக்கும் எனவும், காந்தி படம் உள்ள 5 ரூபாய் நோட்டுகள் இருந்தால் ஆயிரக்கணக்கில் பணம் கிடைக்கும் என புரளி கிளப்பப்பட்டது. இதனால் 5 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தேடி அலைந்த காலம் இருந்தது. தற்போது அந்த நோட்டுகள் மிகவும் பழமையாகி விட்டதால் இதனை வாங்க வியாபாரிகள் மறுக்கின்றனர். எனவே பழைய 5 ரூபாய் நோட்டுகளை வங்கியில் திரும்ப பெற்றுக்கொண்டு புதிய நோட்டுகள் அல்லது நாணயங்களை தர வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.