முத்தையாபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

முத்தையாபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2022-08-14 13:59 GMT

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற மாநகராட்சி அலுவலர்களுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் பகுதி வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க முத்தையாபுரம் கிளைத் தலைவர் தனராஜ், பாலமுருகன், சண்முகம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

ஆக்கிரமிப்புகளை முறையாக அளவீடு செய்துவிட்டு, அதன் பிறகு அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதே கோரிக்கையை அந்தப் பகுதியில் உள்ள மற்ற வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரித்து ஒட்டுமொத்தமாக அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் முத்தையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அந்தப் பகுதி வழியாக வந்த கவுன்சிலர்கள் விஜயகுமார், முத்துவேல் ஆகியோர் அங்கு சென்று வியாபாரிகளிடம் விவரம் கேட்டனர். பின்னர் அவர்களும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று முறையான அளவீடு செய்து, அதன்பிறகு ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

இதை தொடர்ந்து, முறையாக அளவீடு செய்தபிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு, அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் கைவிட்டு திரும்பி சென்றனர்.

மேலும், ஆக்கிரமிப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், போர்டுகளை வியாபாரிகளிடமே மாநகராட்சி அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்