ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
ஓசூர் அட்கோ பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:-
ஓசூர் அட்கோ பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு கடைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் அட்கோ பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பெட்டி கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட சிறு, சிறு கடைகள் உள்ளன. இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்று ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து நேற்று மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் பிரபாகர், குமார் ஆகியோர் ஊழியர்களுடன் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கினர். அப்போது அங்கு ஏராளமான வியாபாரிகள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடும் வாக்குவாதம்
தகவல் அறிந்த ஓசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வியாபாரிகளுக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், ஹரீஷ் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் அங்கு வந்தனர்.
அவர்கள், வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசினர். அப்போது எந்தவித நோட்டீசும் வழங்காமல் கடைகளை காலி செய்ய கூறுவது நியாயம் இல்லை என்றனர். அங்கு இருந்த அதிகாரிகள், போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் அசோகா, கவுன்சிலர் மஞ்சுநாத், அ.தி.மு.க. பகுதி செயலாளர் ராஜி தேவேந்திரன், ஹேமந்த்குமார் மற்றும் கட்சியினர் அங்கு வந்தனர்.
கடைகளை அகற்ற காலஅவகாசம்
பின்னர் அனைவரும் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனை சந்தித்து கடைகளை அகற்ற அவகாசம் கேட்டனர். அதற்கு அவர், 5 நாட்கள் அவகாசம் வழங்கினார். வியாபாரிகள் தரப்பில் கூடுதல் 5 நாட்கள் அவகாசம் கேட்டனர்.
இதுதொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஓசூர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நேற்று பரபரப்பாக காணப்பட்டது.