வந்தவாசியில் வியாபாரிகள் நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டம்

இ-நாம் திட்ட செயலியில் திருத்தம் செய்யக்கோரி வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-28 15:57 GMT

இ-நாம் திட்ட செயலியில் திருத்தம் செய்யக்கோரி வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களுக்கான கட்டுப்படியான விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு இ-நாம் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் பதிவு பெற்ற வியாபாரிகள் இந்த திட்ட செயலி மூலமே நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய இயலும். இந்த செயலியில் எந்த வியாபாரி ஏலம் அதிகமாக நிர்ணயம் செய்கிறாரோ அவருக்கே அதற்கான விளைபொருட்கள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் இணைக்கப்பட்டு, இந்த செயலி மூலம் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திட்ட செயலியில் சில திருத்தங்களை செய்யக்கோரி வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

முன்னர் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு நாங்கள் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்த பின்னர், அந்த நெல்லை எங்கள் கோணிப்பைகளுக்கு மாற்றுவோம். அப்போது தரம் இல்லாத நெல் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச்சென்று சம்பந்தப்பட்ட விவசாயியை அழைத்து பேசி தீர்வு காண்போம்.

கலப்படம்

ஆனால் இப்போது இந்த செயலி மூலம் கொள்முதல் நடைபெறும் போது இதுபோன்று பேசி தீர்வு காண்பது இயலாததாகவே தோன்றுகிறது. எனவே விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு நாங்கள் விலை நிர்ணயம் செய்யும் முன்னர், இந்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகமே வேறு கோணிப்பையில் மாற்றி கலப்படம் இருந்தால் கண்டறிய வேண்டும்.

மேலும் விளைபொருட்களுக்கான விலையை நாங்கள் இந்த செயலியில் பதிவு செய்யும் போது தவறுதலாக அதிக தொகை குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டால் எங்களால் அதை மாற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு நஷ்டமே ஏற்படும். எனவே, வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்து இந்த செயலியில் உரிய திருத்தங்கள் செய்யக்கோரி நெல் கொள்முதலை நிறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வி.பரமேஸ்வரி கூறியதாவது:-

விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விளைபொருட்களை எடுத்து வந்தவுடன் அவற்றின் ஈரத்தன்மை, தரம் ஆகியவற்றை நாங்களே பரிசோதனை செய்து இ-நாம் செயலில் பதிவேற்றிவிடுவோம்.

குற்றவியல் நடவடிக்கை

இந்த செயலி மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் வியாபாரிகள் வீட்டில் இருந்தபடியே எந்த ஒரு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருந்தும் விளைபொருட்களை கொள்முதல் செய்ய இயலும். விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களில் கலப்படம் கண்டறியப்பட்டால் அதற்கான ஏலம் ரத்து செய்யப்படும்.

மேலும் கலப்பட பொருட்கள் எடுத்து வரும் விவசாயிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாபாரிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்த விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வராததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்