குறிப்பிட்ட இடத்தில்தான் தற்காலிக கடைகள் வேண்டும் என வியாபாரிகள் கோர முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குறிப்பிட்ட இடத்தில்தான் தற்காலிக கடைகள் வேண்டும் என வியாபாரிகள் கோர முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வந்தோம். தற்போது அந்த மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் அங்கு கடைகள் நடத்தியவர்களுக்கு தற்காலிகமாக வேறு இடங்களில் கடைகள் ஒதுக்கீடு செய்வது என நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தமே இல்லாத இடத்தில் எங்களுக்கு கடைகள் ஒதுக்கி தர நகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட முடிவு சரியானது அல்ல. இதனால் நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே தற்காலிக கடைகள் ஒதுக்கீடு தொடர்பான நகராட்சி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து, முறையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பழனி நகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், காந்தி மார்க்கெட்டில் மறுகட்டமைப்பு பணிகள் முடிவடையும் வரை மனுதாரர்களுக்கு தற்காலிக கடைகள் அமைத்து தருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த இடத்தை மனுதாரர்கள் ஏற்காமல் அம்மா உணவகத்திற்கு அருகில் தற்காலிக கடைகள் அமைத்து தர கேட்கின்றனர். அங்கு 15 கடைகள் அமைக்க போதுமான இடம் கிடையாது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை ஏற்பது, கைவிடுவது தொடர்பாக மனுதாரர்களே முடிவு செய்ய வேண்டும் என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள், "தற்காலிக கடைகள் அமைத்து கொடுப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மனுதாரர்கள் விரும்பினால் அந்த தற்காலிக கடைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையெனில் தங்களது விருப்பத்தின் பேரில் வேறு இடங்களுக்கு செல்லலாம். ஆனால் குறிப்பிட்ட இடத்தில்தான் தற்காலிக கடைகளை நகராட்சி நிர்வாகம் அமைத்து தர வேண்டும் என வற்புறுத்த முடியாது" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.