திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர் பஸ் நிலையம் வெளியே நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் 100-க்கும் மேற்பட்ட பூ மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த போது போலீசார் வந்து பூக்களை எடுக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பூ வியாபாரிகள், ஒன்றிய கவுன்சிலரும், பூ வியாபாரிகள் மாவட்ட துணைத்தலைவருமான யுவராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.
மனுவில், பல ஆண்டுகளாக பஸ் நிலையம் அருகே 100-க்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்து வருகிறோம். இந்த நிலையில் போலீசாரின் கெடுபுடியால் பூக்களை விற்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, பூ வியாபாரிகளுக்கு தனி இடத்தை ஒதுக்கித்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.