அனிச்சம்பாளையம் மீன் சந்தையில் கடைகள் நடத்த இடம் ஒதுக்கித்தர வேண்டும்மொத்த, சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

அனிச்சம்பாளையம் மீன் சந்தையில் கடைகள் நடத்த இடம் ஒதுக்கித்தர வேண்டும் என மொத்த, சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-03-29 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட மொத்த மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் பழனியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் சங்கம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவுபெற்று செயல்பட்டு வருகிறது. எங்கள் சங்கத்தினருக்கு மீன் வியாபாரம் செய்ய கடைகள் ஒதுக்கித்தர நாங்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்ததன்பேரில் கடந்த 9.8.2021-ல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் இயங்கி வந்த மீன் சந்தையில் வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கித்தந்தனர். நாங்கள் அங்கு குத்தகை கட்டி கடை வைத்து நடத்தினோம். புதிய பஸ் நிலையம் அருகில் இயங்கி வந்த மீன் சந்தை தற்காலிகமானது என்றும், வேறு இடத்திற்கு மாறும்போது எங்கள் சங்கத்திற்கு முறையாக தகவல் அளிப்பதாகவும், நகராட்சியின் மூலம் கடைகள் ஒதுக்கித்தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இந்த சூழலில் புதிய பஸ் நிலையம் அருகில் இயங்கி வந்த தற்காலிக மீன் சந்தை நகராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதை அறிகிறோம். எனவே நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே உறுதியளித்தபடி எங்கள் சங்கத்திற்கான கடைகளை அங்கு ஒதுக்கித்தந்து எங்களுடைய வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்