கனகமூலம் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-28 18:45 GMT

நாகர்கோவில்,

-

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.55 கோடியில் பஸ் நிலையம்

நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும். இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு புதிதாக 250-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது. தற்போது சந்தையில் உள்ள பாதி கடைகளில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். 120-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே இருந்து வருகிறது. டெபாசிட் உயர்வு மற்றும் வாடகை அதிகமாக உள்ளதால் கடைகள் ஏலம் போகவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். காலியாக கிடக்கும் கடைகளை மாநகராட்சி சார்பில் ஏலம் விட பலமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கடைகளை ஏலம் எடுக்க யாரும் வருவதில்லை.

இந்தநிலையில் வடசேரியில் ரூ.55 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையமும், கார் பார்க்கிங் உள்ளிட்ட 3 மாடி கட்டிடமும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதே சமயத்தில் இந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மேயர் மகேஷை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

ஆர்ப்பாட்டம்

ஆனால் பஸ் நிலையத்திற்கு என அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் அதை மாற்ற எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் வியாபாரிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று ஒரு நாள் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து வடசேரி அண்ணா சிலை அருகில் சந்தை ஓரத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பந்தல் போடப்பட்ட நிலையில் போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். எனவே பந்தல் அமைக்க கூடாது என்றனர். மேலும் போடப்பட்ட பந்தலும் அகற்றப்பட்டது.

இதனால் நேற்று காலை வியாபாரிகள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வடசேரி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வடசேரி கனகமூலம் சந்தை மொத்த- சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திரன், குமரி மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் நாகராஜன், ஜோசப்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காய்கறி வியாபாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தை மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு

இதைத் தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் சந்தையின் உள்புறத்தில் காலை 10.45 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளை அடைத்து நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்ட முடிவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவது என வியாபாரிகள் முடிவு செய்திருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்