மொபட் விபத்தில் வியாபாரி சாவு
சுரண்டை அருகே மொபட் விபத்தில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
சுரண்டை:
சுரண்டை அருகே கரைகண்டார் குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமாடன் மகன் சகாதேவன் (வயது 45). நெல் வியாபாரி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சகாதேவன் தன்னூத்து கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு சுரண்டைக்கு தனது மொபட்டில் வந்துள்ளார். சுரண்டை ஆனைகுளம் விலக்கு அருகில் மின்வாரிய அலுவலகம் அருகே பாலத்தில் வந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் இடதுபுறம் பாதை இருப்பதாக நினைத்து திரும்பி உள்ளார். இதனால் பாலத்தில் இருந்து தலைகீழாக விழுந்த சகாதேவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் நேற்று காலை மொபட்டுடன் சகாதேவன் இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் சுரண்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுதந்திரதேவி மற்றும் போலீசார் சகாதேவன் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.