ரூ.28 லட்சம் நகைகளுடன் போலீசில் சிக்கிய வியாபாரி திண்டிவனம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

திண்டிவனம் ரெயில் நிலையத்தில் ரூ.28 லட்சம் நகைகளுடன் வியாபாரி ஒருவர் போலீசில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.

Update: 2022-12-12 18:45 GMT


திண்டிவனம்,

சென்னையில் இருந்து குருவாயூருக்கு நேற்று காலை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் திண்டிவனத்தில் நின்று சென்றது. அப்போது, ரெயிலில் இருந்து இறங்கியவர்களில் ஒருவர், 3-வது நடைமேடையில் கையில் ஒரு பையுடன் நடந்து சென்றார்.

அவரை சந்தேகத்தின் பேரில், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேசி மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், சென்னை தம்பு செட்டி தெருவை சேர்ந்த நகை வியாபாரி விமல்சந்த் (வயது 52) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில், 560 கிராம் தங்க நகைகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும். வரி செலுத்தாமல் நகையை விற்பனை செய்திடும் வகையில் அவர் எடுத்து வந்தது தெரியவந்தது.

பரபரப்பு

இதையடுத்து, விமல்சந்த்தை விழுப்புரத்தில் இருந்து வந்த கமர்ஷியல் டேக்ஸ் அலுவலக துணை இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் குழுவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அவர்கள் நகைகளை மதிப்பீடு செய்து, அதற்கான வரி மற்றும் அபாராத தொகையுடன் 1 லட்சத்து 67 ஆயிரத்து 328 ரூபாயை கட்டுவதற்கு அறிவுறுத்தினர். அதன்படி அந்த பணத்தை விமல்சந்த் கட்டியதை தொடர்ந்து, நகையை அவரிடம் ஒப்படைத்து, அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்