தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய-மாநில அரசு நிறுவனங்களில் ஒப்பந்த மற்றும் அவுட் சோர்சிங் முறைகளை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சாா்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கருப்பையா, மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தினக்கூலி வழங்கி, நிரந்தரப்படுத்தி, குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய-மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை, தனியார் ஆலைகளில் உற்பத்தி பகுதிகளில் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை புகுத்துவதை கைவிட வேண்டும். உள்ளாட்சி துறையில் அவுட்சோர்சிங் முறை புகுத்த பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணைகள் 115, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த முறையை ரத்து செய்திட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.