ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் அதிக பாரம் ஏற்றிவரும் கரும்பு டிராக்டர்களால் அடிக்கடி விபத்து- வாகன ஓட்டுனர்கள் குமுறல்
ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் அதிக பாரம் ஏற்றி வரும் டிராக்டர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
கொடுமுடி
ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் அதிக பாரம் ஏற்றி வரும் டிராக்டர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
2 டிரைலர் டிராக்டர்கள்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளார்கள். அறுவடை செய்த பின்னர் கரூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு டிராக்டர்களில் கரும்புகள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால் ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் குறிப்பாக கொடுமுடியில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் எப்போதும் கரும்பு பாரம் ஏற்றிய டிராக்டர்கள் சென்று வருகின்றன. ஒரு டிராக்டரில் ஒரு டிரைலர் (பாரம் சுமக்கும் பகுதி) பொருத்தி அதில் கொண்டு சென்றால், எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் 2 டிரைலர்களை பொருத்தி அதில் உயரமாக கரும்பு பாரங்கள் ஏற்றி செல்கிறார்கள்.
அடிக்கடி விபத்து
ரோட்டில் குறுகலான பகுதியில் டிராக்டர் திரும்பும்போது 2 டிரைலர் பூட்டப்பட்ட டிராக்டர்கள் ஒரே மாதிரி திரும்பாது. பின்னால் உள்ள டிரைலர் திரும்பும் திசை மாறுபடும். அதுபோன்ற நேரங்களில் டிராக்டரை முந்திச்செல்ல முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதேபோல் உயரமாக பாரம் ஏற்றிச்செல்லும் கரும்புகளின் மேல் பகுதி மின் கம்பிகளில் சிக்கி தீ விபத்துகளும் ஏற்படுகின்றன. அப்போது சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்படுகிறது.
ரோட்டில் விழுகின்றன
இதேபோல் 2 டிரைலரில் கரும்பு பாரம் இழுத்து செல்லும் டிராக்டர்களில் கரும்பு கட்டுகளை முறையாக கயிறுகளை கொண்டு இறுக்கி கட்டுவதில்லை. ரோட்டில் மேடு, பள்ளங்களை கடந்து செல்லும்போது, கயிறு நழுவி கரும்பு கட்டுகள் ரோட்டில் விழுகின்றன. அப்போது டிராக்டரின் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தை சந்திக்கிறார்கள்.
கடந்த ஒரு மாதத்தில் கொடுமுடி பகுதியில் கரும்பு பார டிராக்டர்களால் ஒரு மாணவன் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்கள். எனவே போக்குவரத்து போலீசார் 2 டிரைலர்களை கொண்டு கரும்பு பாரம் இழுத்து செல்லும் டிராக்டர்களை அனுமதிக்க கூடாது. அதேபோல் அதிக உயரத்தில் கரும்புகள் ஏற்றி செல்வதை தடுத்து, முறையாக கயிற்றால் கட்டி சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை கொண்டு செல்லவேண்டும் என்று வாகன ஓட்டிகள் தங்களது மனக்குமுறலை முறையிட்டுள்ளனர்.