பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

காணும் பொங்கலையொட்டி பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேபோல் களக்காடு தலையணையிலும் உற்சாக குளியல் போட்டனர்.

Update: 2023-01-16 20:59 GMT

விக்கிரமசிங்கபுரம்:

காணும் பொங்கலையொட்டி பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேபோல் களக்காடு தலையணையிலும் உற்சாக குளியல் போட்டனர்.

அகஸ்தியர் அருவி

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதாலும் இது ஒரு ஆன்மிக அருவியாக கருதுவதாலும், இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்தநிலையில் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் வழியில் பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் வாகனங்களை சோதனை செய்து அதில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள், சோப்பு, ஷாம்புகள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்த பின்னரே மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவிக்கு அனுமதிக்கப்படுவர்.

காணும் பொங்கல்

இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் என்பதால் இந்த அருவிக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது கார் மற்றும் வேன்களில் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க குவிந்தனர். இதனால் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாகனம் அணிவகுத்து நின்றதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

கூட்டம் அலைமோதியதால் சோதனை சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து சென்றன. இதனால் பாபநாசம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

களக்காடு தலையணை

இதேபோல் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

சுற்றுலா பயணிகள் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கத்தி, அரிவாள், தீப்பெட்டி போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே தலையணை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் சோதனை செய்தனர். உள்ளூர் மட்டுமின்றி, நெல்லை, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கார், வேன்களில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தலையணையில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமே தென்பட்டது.

ஆனந்த குளியல்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் வந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டும், உணவருந்தியும் காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனப்பகுதியில் வாகன நிறுத்துமிடங்கள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் வனசரகர் பிரபாகரன் முன்னிலையில் கோதையாறு, திருக்குறுங்குடி களக்காடு வன சரகங்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்களும், களக்காடு போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பச்சையாறு

இதுபோல களக்காடு பச்சையாறு அணை, தேங்காய் உருளி அருவி, சிவபுரம், அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயில் பகுதிகளிலும் பொதுமக்கள் திரண்டு காணும் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

நம்பி மலை

காணும் பொங்கலையொட்டி திருக்குறுங்குடி நம்பி கோவில் மலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். பாலித்தீன் பொருட்கள், மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நம்பி கோவில் வன சோதனைச்சாவடியில் திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஸ்வரன் தலைமையில், வன ஊழியர்கள் சோதனை செய்தனர்.

தடுப்பணை மற்றும் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.

வனப்பகுதியில் சமைப்பதற்கு தடை உள்ளதால் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை பாறைகளிலும், மரத்தடியிலும் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்