ஆபத்தை அறியாமல் செல்பி எடுத்து விளையாடும் சுற்றுலா பயணிகள்
தனுஷ்கோடியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. ஆபத்தை அறியாமல் துறைமுகத்தின் உள்ளே சென்று செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் விளையாடினார்கள்.
ராமேசுவரம்,
தனுஷ்கோடியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. ஆபத்தை அறியாமல் துறைமுகத்தின் உள்ளே சென்று செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் விளையாடினார்கள்.
கடல் சீற்றம்
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. அது போல் இயற்கையாகவே தனுஷ்கோடி கடல் பகுதி கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் உள்ள பகுதியாகும்.
இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாகவே கடந்த 2 நாட்களாக பலத்த. சூறாவளி காற்று வீசி வருகின்றது. மேலும் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் பயங்கர சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.
செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்
இதனிடையே தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் பகுதியில் உள்ள துறைமுகத்தில் மோதி பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாகவும் வேகமாக சீறி எழுந்து வருகின்றன. துறைமுகப் பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் சென்று வேடிக்கை பார்க்க பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தின் உள்ளே மிக அருகில் நின்று கடல் அலையின் சீற்றத்தை வேடிக்கை பார்த்தனர். அதோடு செல்போனில் செல்பி எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள துறைமுகத்தில் உள்ளே சென்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்து செல்பி எடுத்து வருவதால் கடல் சீற்றத்தில் சிக்கி தடுமாறி கடலில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாகவே எம்.ஆர் சத்திரம் துறைமுகத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் வைத்து அந்த பாதையை அடைக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகளும் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். சுற்றுலா மகிழ்ச்சியாக அமைய வேண்டுமே தவிர ஏன் சுற்றுலா வந்தோம் என்று கருதி விடக்கூடாது. உயரத்தில் எழும் அலையின் அழகை ரசிக்கிறோம் என்ற ஆசையில் தடுமாறி கடலுக்குள் சுற்றுலா பயணிகள் விழுந்து விடக்கூடாது. எனவே மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.