கொடைக்கானலுக்கு படையெடுத்த வெளிமாநில சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.;

Update: 2022-12-18 16:59 GMT

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில், வாரவிடுமுறையையொட்டி நேற்றும், இன்றும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.

குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதுதவிர ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இதனால் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படகு சவாரி

இதற்கிடையே கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். அப்போது தரையிறங்கிய மேகக்கூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதேபோல் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து பொழுதை போக்கினர். கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு நெருங்கி வருவதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்