ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். அவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி,
பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். அவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள்
தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு நேற்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இதனால் மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.
இந்தநிலையில் நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவுவாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது. அங்குள்ள கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
படகு சவாரி
பூங்காவில் உள்ள பெரிய புல்வெளி மைதானம் பராமரிப்பு காரணமாக மூடப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. இதன் காரணமாக அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
அங்கு மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். காட்சி மாடங்களில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் குதிரை சவாரி செய்து குதூகலம் அடைந்தனர்.
மலை ரெயில் பயணம்
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அடுத்த 2 மாதங்களுக்கு மலை ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. கூட்டம் அலைமோதுவதால், டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் ஊட்டி-கேத்தி இடையே சுற்று ரெயிலும் இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் மலை ரெயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
ரெயிலில் இருந்து இறங்கியதும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இதேபோல் குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
--------
(பாக்ஸ்) போக்குவரத்து நெரிசல் குறைந்தது
ஊட்டியில் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வாகனங்களில் வந்தனர். அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அவதியடைந்தனர். இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. குன்னூர் வழியாக ஊட்டிக்கு வரும் வாகனங்கள் லவ்டேல் சந்திப்பில் இருந்து பெர்ன்ஹில் வழியாக ஊட்டி நகருக்குள் திருப்பி விடப்பட்டு உள்ளது. சுற்றுலா பஸ்கள் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு வருகிறது. கூடலூரில் இருந்து வரும் வாகனங்கள் எச்.பி.எப். பகுதியில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சுற்றுலா பயணிகள் சுற்று பஸ்களில் சென்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதனால் ஊட்டியில் நேற்று போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது.