கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்; 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.இதனால் 5 கி.மீ. தூரத்துக்கு மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2023-07-01 21:00 GMT

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.இதனால் 5 கி.மீ. தூரத்துக்கு மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சுற்றுலா வாகனங்கள்

'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானலில் குளு, குளு சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை நிலவுகிறது.

இந்தநிலையில் வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் படையெடுத்தனர். ஒரேநேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனூர், சீனிவாசபுரம், உகார்த்தேநகர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதன்பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்றன.

உற்சாகம்

பின்னர் சுற்றுலா பயணிகள், கொடைக்கானல் பில்லர்ராக், பைன்மரக்காடு, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், டால்பின் நோஸ், மதிகெட்டான் சோலை, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோழா அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளை பார்த்து ரசித்தனர்.

இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு தங்களது குடும்பத்தினருடன் இயற்கை காட்சிகளையும், செடிகளில் பூத்துக்குலுங்கும் பூக்களையும் பார்த்து ரசித்தபடி பொழுதுபோக்கினர். இதுதவிர நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, அன்றாட பணிகளுக்கு செல்லும் மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் சென்ற மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர். போதிய போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட காவல் துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்