கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதமான சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-04-02 19:00 GMT

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. நட்சத்திர ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. பல்வேறு பூங்காக்களில் மலர்கள் பூத்துக்குலுங்கி காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

படகு சவாரி

இதற்கிடையே நேற்று வாரவிடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்ததால் வனப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாரும், வனத்துறையினரும் போக்குவரத்தை சரிசெய்தனர்.

வனப்பகுதிகளில் உள்ள பேரிஜம் ஏரி, குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

சாரல் மழை

கொடைக்கானல் நேற்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக காலை முதல் மாலை வரை மேகமூட்டங்கள் சூழ்ந்து குளுமையான சூழல் நிலவியது. அத்துடன் லேசான சாரல் மழையும் பெய்தது. இதனை சுற்றுலா பயணிகள் பெரிதும் அனுபவித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்