கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலியாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறை
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டி வருகிறது. குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
அதன்படி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
நேற்று அதிகாலை முதலே சுற்றுலாப்பயணிகள் வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதனால் கொடைக்கானலின் நுழைவுவாயில் மற்றும் வெள்ளிநீர் வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து சேர்ந்தனர்.
இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் வாகனங்கள் நெரிசலில் சிக்கின. நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
எழில் கொஞ்சும் வெள்ளி நீர்வீழ்ச்சி
வெள்ளிநீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் எழில் கொஞ்சும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் கண்ணை கவரும் பூக்களை பார்த்து ரசித்தனர்.
நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து பொழுதை போக்கினர். மோயர்பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கொடைக்கானலில் நிலவிய இதயத்தை வருடும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடுதல் போலீசாரை நியமித்து கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.