புலியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
மசினகுடி-மாயாறு சாலையில் புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து மாயாருக்கு செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புலி ஒன்று சாலையை கடந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.