குற்றாலம் அருவிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலம் அருவிகளில் நேற்று நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-07-05 18:45 GMT

குற்றாலம் அருவிகளில் நேற்று நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

நீர்வரத்து குறைந்தது

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று முன்தினம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

நேற்று காலையில் ஐந்தருவியில் நீர்வரத்து குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

உற்சாக குளியல்

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது. வெயில் தலை காட்டாததால் இடையிடையே சாரல் மழை தூறி இதமான சூழல் நிலவியது.

கடந்த சீசனின்போது கனமழை காரணமாக மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பெண்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஓரமாகவும், பாதுகாப்பாகவும் நின்று குளிக்குமாறு போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இரவில் தடை

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நேற்று இரவு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் பாதுகாப்பு கருதி அந்த 3 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்