கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்; புகைப்படம், 'செல்பி' எடுத்து உற்சாகம்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் புகைப்படம், ‘செல்பி’ எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

Update: 2023-02-26 20:30 GMT

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் புகைப்படம், 'செல்பி' எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதிலும் விழாக்காலங்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று வார விடுமுறையையொட்டி காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வாகனங்களில் வந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களுக்கு சென்றனர்.

'செல்பி' எடுத்து உற்சாகம்

குறிப்பாக பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், தேவதை அருவி, பியர் சோழா அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது அவர்கள் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு பொழுதுபோக்கினர். இதேபோல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்