ஆங்கில புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆங்கில புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.

Update: 2023-01-01 16:58 GMT

ஆங்கில புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.

ஆங்கில புத்தாண்டு

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் இரவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இதனால் தங்கும் விடுதிகளில் அறைகள் அனைத்தும் நிரம்பின.

நேற்று நள்ளிரவில் கொடைக்கானலில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதற்கிடையே இன்று அதிகாலை முதலே புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். அவர்கள் கார், சுற்றுலா வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக கொடைக்கானல் நகரின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. இதேபோல் ஏரிச்சாலை, நாயுடுபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதன்பிறகு வாகனங்களில் சுற்றுலா இடங்களுக்கு சென்றனர்.

உற்சாகம்

கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் நிலவுகிறது. இதனால் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் குளிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கொடைக்கானலுக்கு வருகை தந்து ஆங்கில புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடினர்.

மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் ரசித்தனர். அப்போது தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர்.

குளிர் அதிகரிக்கும்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானலில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக ஏரிச்சாலையில் 4 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மீண்டும் கடும் உறைபனி நிலவியது. இதனால் பொதுமக்கள் பலர் பகல் நேரத்திலேயே குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடி நடமாடினர். வரும் நாட்களில் மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி, குளிர் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்