மேகமலை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வனத்துறையினரிடம் வாக்குவாதம்

மேகமலை அருவிக்கு உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி மறுத்ததால் வனத்துறையினரிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-12 21:00 GMT

மேகமலை அருவிக்கு உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி மறுத்ததால் வனத்துறையினரிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கட்டணம் வசூல்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழுவில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மேகமலை அருவி உள்ளது. சின்னசுருளி என்று அழைக்கப்படும் இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

மேகமலை அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் கோம்பைத்தொழு ஊராட்சி சார்பில் வாகனத்திற்கு ரூ.20-ம், வனத்துறையினர் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.30-ம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 2 இடங்களில் கட்டணம் வசூல் செய்தபோதிலும் அருவி பகுதியில் வாகன நிறுத்தம், பாதுகாப்பு வேலி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது சுற்றுலா பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் அருவி பகுதியில் உள்ள பெண்களுக்கான உடை மாற்றும் அறைகளும் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வனத்துறையினர் சோதனை சாவடி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. அருவிக்கு அருகில் வரை தார்சாலை அமைக்கப்பட்டு இருந்தாலும் அங்கு வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சோதனை சாவடி அருகில் நிறுத்திவிட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வாக்குவாதம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் சிலர் மேகமலை அருவிக்கு வந்தனர். அப்போது அவர்கள் தங்களது வாகனங்களை வனத்துறை சோதனை சாவடி அருகே நிறுத்திவிட்டு, அருவிக்கு நடந்து செல்ல தயாராகினர். அப்போது அவர்கள் உணவுப்பொருட்களை எடுத்து செல்ல முயன்றனர். இதனை பார்த்த வனத்துறையினர், உணவுப்பொருட்கள் எதுவும் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அருவி பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. எதற்காக 2 இடங்களில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்ல ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வனத்துறையினரிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம் செய்த காட்சிகளை ஒருவர் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை, மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேகமலை அருவியில் அடிப்படை வசதிகளை செய்து தர வே்ணடும் என்றும், அருவி பகுதி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்