ஆடிப்பெருக்கையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை கொடிவேரி அணை வெறிச்சோடியது

ஆடிப்பெருக்கையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2022-08-03 21:27 GMT

கடத்தூர்

ஆடிப்பெருக்கையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்பட்டது.

கொடிவேரி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இங்கு தடுப்பணையில் இருந்து தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும்.

எனவே கொடிவேரி அணையில் குளிப்பதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை சக உறவினர்களுக்கு பகிர்ந்து உண்பர். அதுமட்டுமின்றி அங்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்களையும் வாங்கி உண்பர்.

குளிக்க தடை

தற்போது பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கி விட்டதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடவும் வாய்ப்பு இருந்ததால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி ஆடிப்பெருக்கைெயாட்டி கொடிவேரி அணையில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெறிச்சோடியது

இந்த நிலையில் ஆடிப்பெருக்கான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக கொடிவேரி அணைக்கு வந்தனர். ஆனால் தடை காரணமாக சுற்றுலா பயணிகள் யாரையும் குளிக்க பொதுப்பணித்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும் பயணிகள் குளிக்க செல்வதை தடுக்கும் வகையில் கொடிவேரி அணை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் கொடிவேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர். இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் அங்குள்ள மீன் வறுவல் விற்பனை செய்யும் கடைகளும் வெறிச்சோடியது.

இதனிடையே சுற்றுலா பயணிகள் பலர் கொடிவேரி பாலத்தின் முன்பு நின்றபடி கொடிவேரி அணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரை செல்போன் மூலம் படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்