வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஆழியாறு சோதனைச்சாவடி வழியாக வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்தது.

Update: 2023-08-31 19:45 GMT

பொள்ளாச்சி

ஆழியாறு சோதனைச்சாவடி வழியாக வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்தது.

வனத்துறை தடை

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் வால்பாறை உள்ளது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக வால்பாறை விளங்குகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி வழியாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

இதனால் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்தவர்கள் மாலை 6 மணிக்கு முன்பாக சோதனைச்சாவடியை கடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சோதனைச்சாவடியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

உள்ளூர் மக்களுக்கு அனுமதி

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வால்பாறைக்கு இரவில் செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்வது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மலைப்பாதையில் கரடி, யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் மட்டும் வால்பாறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் வால்பாறையை சேர்ந்த உள்ளூர் மக்கள் அவசர தேவைக்கு செல்லலாம். அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் வழக்கம்போல் செல்லலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்