மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடியாக குறைந்ததுகாவிரி ஆற்றில் குளிக்க தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் முனியப்பன் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-10-01 20:14 GMT

மேட்டூர்

மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் முனியப்பன் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 524 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 446 கனஅடியாக குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 37.்50 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 36.94 அடியாக குறைந்தது.

அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடிக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் என்பதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

40 அடிக்கு கீழ்...

மேட்டூர் அணை நீர்மட்டம் 40 அடிக்கு கீழ் குறைந்துள்ளதால் அணையின் கீழ்மட்ட மதகு மற்றும் அணை மின் நிலையம் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள கால்வாய் வழியாக பாய்ந்தோடி மேட்டூர் காவிரி ஆற்றில் கலக்கிறது.

கீழ்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுவதால் நீரின் விசை இந்த பகுதியில் அதிகமாக உள்ளது.

குளிக்க தடை

இதனால் பொதுமக்கள் யாரும் இந்த பகுதியில் குளிப்பதற்கு போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதியில் குளிக்க சென்ற துரைமுருகன் என்பவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். நேற்று வரை அவருடைய நிலை என்ன என்பது தெரியவில்லை.

நேற்று விடுமுறை நாள் என்பதால் மேட்டூருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இவர்கள் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வழக்கம் போல குளிக்க சென்றனர். அப்போது அந்த பகுதியில் குளிக்க போலீசார் தடை விதித்ததால் கூட்டம், கூட்டமாக ஒன்று கூடி நின்ற சுற்றுலா பயணிகள் தண்ணீரில் குளிக்க முடியாத ஏக்கத்துடன் காவிரி ஆற்றை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்