சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்ததை அடுத்து சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்தநிலையில் கடந்த வாரம் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சுருளி அருவி பகுதியில் முகாமிட்டன. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். மேலும் அருவி பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் சுருளி அருவி பகுதியில் இருந்து அடர்ந்து வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன. இதையடுத்து காட்டு யானைகள் இடம்பெயர்ந்ததை உறுதி செய்த வனத்துறையினர், நேற்று முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனர். பின்னர் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் ஆனந்தமாக குளித்தனர்.