மேட்டூர், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி மேட்டூர், ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டூர்
கோடை விடுமுறையையொட்டி மேட்டூர், ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டூர் அணை
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேட்டூர் அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் மேட்டூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் நேற்று காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இவர்களில் சிலர், காவிரியாற்றில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் முனியப்ப சாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து தங்கள் சமைத்த உணவை பூங்காவிற்கு எடுத்து சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
பவள விழா கோபுரம்
சுற்றுலா பயணிகளில் சிறுவர், சிறுமிகள் சர்க்கிள் ஊஞ்சல், சீசா பலகை போன்ற விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் வலது கரையில் அமைக்கப்பட்டுள்ள பவள விழா கோபுரத்தில் இருந்து மேட்டூர் அணையின் அழகினையும், முழுமையான தோற்றத்தையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேட்டூரில் பூங்கா, காவிரி ஆற்றங்கரை, முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காட்சி அளித்ததால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. இதன் காரணமாக பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.37 ஆயிரத்து 795 வசூலானது.
ஏற்காடு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவியது. இதனால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனிடையே நேற்று விடுமுறை என்பதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஏற்காடு படகு இல்லத்திற்கு வந்து படகுகளில் சவாரி செய்தனர். இதுபோல ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். ஏற்காடு பேருந்து நிலையம் மற்றும் ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் காலை முதலே கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது.