முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

Update: 2023-04-29 18:39 GMT

முத்துப்பேட்டை;

கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

அலையாத்திக்காடுகள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அலையாத்திக்காடுகள் உள்ளன. அலையாத்திக்காடுகளின் உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகள் அழகாக இருக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும்.முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் ஆசியா கண்டத்தில் காணப்படக்கூடிய மிகப்பெரிய அலையாத்தி காடாகும். உலக அளவில் இக்காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாள 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய காடுகள் 4827 சதுர கி.மீ பரப்பளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை பகுதியில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவிரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது.

5 கிளை ஆறுகள்

இதன் இடையில் உள்ள முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் தெற்கு எல்லையாக கடலில் பாக்ஜல சந்தியையும், வடக்கு களிமண் உப்பளத்தையும் கொண்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையிலிருந்து வரும் காவிரி ஆறு வெண்ணாறு கிளையாக பிரிகிறது. இந்த கிளை ஆறு மொத்தம் 5 கிளை ஆறுகளாக பாமனியாறு, கோரையாறு, கிளைதாங்கியாறு, மரைக்காகோரையாறு மற்றும் வளவனாறு என பிரிந்து செல்கின்றன.முத்துப்பேட்டையிலிருந்து 7 கி.மீ தொலைவு கடந்து முல்லிப் பள்ளம், லகூன் என்ற காயல் பகுதியை சென்றடைகிறது. இப்பகுதி கோடையில் 16ஆயிரம் எக்டர் அளவிலும் மழைக்காலத்தில் 20 ஆயிரம் எக்டர் அளவிலுமாக பரந்த நீர்ப்பகுதியாக விரிந்துள்ளது. இறுதியில் பாக்ஜல சந்தியை வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

வெளிநாட்டு பறவைகள்

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் அலையாத்தி புதர்கள் மற்றும் அலையாத்தி மரங்கள் என்ற 2 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் இருந்து பிப்ரவரி வரை பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. மொத்தத்தில் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மிக அதிகமாக பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால் வாத்து, குளத்து கொக்கு, வெண்கொக்கு போன்றவை இப்பகுதிக்கு வருகின்றன. இந்தியாவில் முதன் முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும்தான் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மரம் நடப்பாதைகள், உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் காட்டுக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சுற்றுலா பயணிகள் வருகை

இங்கு சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி பயணம் செய்யலாம். முத்துப்பேட்டை பகுதி தஞ்சை மாவட்டத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக 20 கி.மீ தூரத்திலும், அதிராம்பட்டிணம் வழியாக 14 கி.மீ தூரத்திலும், கும்பகோணம் - மன்னார்குடி வழியாக 35 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டிணம் - திருத்துறைப்பூண்டி வழியாக 30 கி.மீ தூரத்திலும், வேதாரண்யம் வழியாக 35 கி.மீ தூரத்திலும் முத்துப்பேட்டையை அடையலாம். அலையாத்தி காடுகளுக்கு செல்ல முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் விதிமுறைக்கு உட்பட்டு உரிய அனுமதி பெற்று ஜாம்புவானோடை படகு துறையிலிருந்து படகில் செல்லலாம். அங்கு வனத்துறை சார்பில் படகு தயார் நிலையில் நிற்கும் அதில் 12 பேர் பயணம் செய்யலாம். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் ஆனந்தமாக படகில் சென்று இயற்கை எழிலை ரசிக்கிறார்கள்அதேபோல் சுற்றுலா பயணிகள் வசதிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்