சுற்றுலா வேன்-4 கார்கள் அடுத்தடுத்து மோதல்

புதுச்சத்திரம் அருகே சுற்றுலா வேன்-4 கார்கள் அடுத்தடுத்து மோதியதில் டாக்டர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-12-24 19:01 GMT

புதுச்சத்திரம் அடுத்த பாச்சலில் தனியார் கல்லூரி முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் மற்றும் சுற்றுலா வேன் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சுற்றுலா வேனில் பயணம் செய்த கர்நாடக மாநிலம், சிக்மா ரத்தினத்தெருவை சேர்ந்த டாக்டர் நவீன்குமார் (வயது 47), தீபிகா (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் அதே வேனில் பயணம் செய்த டாக்டர் நவீன்குமாரின் மனைவி டாக்டர் அருணா (46), பிரபுதேவா (52), ராஜம்மாள் (52), ரத்தினம்மாள் (70), விஜயா (45), வீணா (47) உள்பட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நவீன்குமார் மற்றும் தீபிகா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 8 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த அனைவரும் கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள கோடிபாளையத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் என்பதும், அவர்கள் தஞ்சாவூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்றபோது விபத்தில் சிக்கியதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் விபத்து குறித்து பென்னாகரம் தாலுகா சஞ்சல்நத்தத்தை சேர்ந்த கார் டிரைவர் தனசேகரன் (49) புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்