தில்லையாடியில், காந்தி நினைவுத்தூண் புதுப்பிக்கப்படுமா?

தில்லையாடியில், பொதுமக்களுடன் காந்தி கலந்துரையாடிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் அது புதுப்பிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.;

Update: 2022-10-01 19:00 GMT

தில்லையாடியில், பொதுமக்களுடன் காந்தி கலந்துரையாடிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் அது புதுப்பிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தில்லையாடி வள்ளியம்மை

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடி வரலாற்றில் இடம் பிடித்த ஊராகும். தில்லையாடி பகுதியை சேர்ந்த பலர் தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய அறப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவர்.

தில்லையாடி என்றதும் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் வள்ளியம்மை. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தனது 16 வயதில் உயிர் தியாகம் செய்தவர் வள்ளியம்மை என்பது வரலாறு. தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தை போற்றும் வகையில் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

ரெயிலில் வந்த காந்தி

கடந்த 1915-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி காந்தி தில்லையாடிக்கு வந்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தில்லையாடிக்கு வருவதற்கு முன்னர் காந்தி தனது மனைவி கஸ்தூரிபாயுடன் 1915-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக மயிலாடுதுறைக்கு வந்தார்.

மறுநாள் அங்கிருந்து இரட்டை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் புறப்பட்டு தரங்கம்பாடி வந்தடைந்தார். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரகவாதிகளும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து தில்லையாடிக்கு காந்தி வருகை தந்ததாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

காந்தி நினைவுத்தூண்

தில்லையாடியில் காந்தி, பொதுமக்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய இடத்தில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டு உள்ளது. காந்தி தில்லையாடிக்கு வந்ததன் நூற்றாண்டு நினைவு விழா தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்தது.

காந்தி கலந்துரையாடியதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூண் தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்திற்கு எதிரே உள்ளது. இந்த நினைவுத்தூணை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

சேதம் அடையும் அபாயம்

தற்போது அந்த நினைவுத்தூண் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நினைவுத்தூணின் உச்சியில் தாமரை மொட்டு போன்ற அமைப்பு உள்ளது. அதில் செடி வளர்ந்துள்ளது. இதை அப்புறப்படுத்த தவறினால் செடி, மரமாக வளர்ந்து நிணைவுத்தூண் சேதம் அடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே அந்த செடியை அப்புறப்படுத்தி நினைவுத்தூணின் தாமரை மொட்டு போன்ற அமைப்பையும், பீடத்தின் கீழ் உள்ள சுற்றுச்சுவரையும் பாதுகாக்க வேண்டும். நினைவுத்தூண் மீது வர்ணம் பூசி அழகுபடுத்த வேணடும். நினைவு தூணின் தரை தளத்தில் முளைத்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்