சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி

குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள். இதில் 53 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-09-30 21:45 GMT

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்கவும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

நீலகிரியில் 2-வது சீசன்

இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் நிலவி வருகிறது. அதோடு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.

பள்ளத்தில் கவிழ்ந்தது

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை பஸ்சில் 61 பேர் சுற்றுலா வந்தனர். இதில் பலர் கடையம், ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள். அவர்கள், அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர்.

மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டு இருந்தது.

மரப்பாலம் அருகே 9-வது கொண்ைட ஊசி வளைவில் பஸ் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த பஸ், சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

மீட்பு பணி

இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், மீட்பு பணியை துரிதப்படுத்தினர். சாலையில் இருந்து கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு துறையினர் பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

8 பேர் பலி

அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.கடையம் சண்முகையா மனைவி பேபி கலா(வயது 36)

2. கடையம் விஜயசுப்பிரமணி மகன் நிதின் (15)

3.ஆழ்வார்குறிச்சி பண்டாரம் மனைவி முப்பிடாதி அம்மாள் (67)

4.ஆழ்வார்குறிச்சி முருகேசன்(65)

5. தென்காசி ராம் மகள் கவுசல்யா(29)

6. கீழக்கடையம் பிச்சை முத்து மகன் இளங்கோ(64)

7.கடையம் முருகன் மனைவி ஜெயா (50)

8.கடையம் கருப்புசாமி மகன் தங்கம்(40)

53 பேர் படுகாயம்

இவர்கள் தவிர 53 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

சண்முகத்தாய்(65), பகவதி(72), பாலமுருகன்(44), கற்பகவல்லி(42), கோமதி(56), மாதவன்(6), சுப்பு(53), வெள்ளையம்மா(53), பழனி செல்வி(10), ராமையா(60), ராதா(57), மாரியம்மா(54), கோவிந்தன்(73), சுசாந்த பாலன்(15), சரசம்மாள்(64), கீர்த்தி அஸ்வின்(13), கீர்த்தி அபிநவ்(11), வள்ளியம்மா(56), அன்பரசி(60), அருள் விசாலி(15), நாதன் அலெக்ஸ்(14), முத்துக்குட்டி(65), பிரேமா(50), பேபி ராணி(35), செண்பகவல்லி(42), முருகேசன்(65), குத்தாயி(60), பிரியதர்ஷினி(18), குட்டியம்மா(52), வேலுசாமி(69), பொன் பாரதி(15), பொன் பிரியதர்ஷினி(15), பேச்சி(48), முத்துசாமி(49), பண்டாரம்(74), கோபால்(30) உள்பட 53 பேர் ஆவர். அதில் 2 பேர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கோத்தகிரி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, விபத்தில் சிக்கியவர்கள் தென்காசியில் இருந்து கடந்த 28-ந் தேதி கேரள மாநிலம் குருவாயூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு புறப்பட்டு உள்ளனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு இன்று(நேற்று) ஊட்டிக்கு வந்து இருக்கின்றனர். இங்கிருந்து கோவை மருதமலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்தில் சிக்கியுள்ளது என்றனர்.

அமைச்சர், கலெக்டர் ஆறுதல்

குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

உறவினர்களுக்கு தகவல் கூட சொல்ல முடியவில்லை

-பலியான பெண்ணின் கணவர் கண்ணீர்

இந்த விபத்தில் பலியான கடையத்தை அடுத்த ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த முப்பிடாதி அம்மாளின் கணவர் பண்டாரம் கூறியதாவது:-

நான் ஓட்டல் நடத்தி வருகிறேன். சுற்றுலாவுக்காக மனைவியுடன் புறப்பட்டு வந்தேன். கேரளா, ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு கோவை மருதமலைக்கு ெசன்றுவிட்டு சொந்த ஊருக்கு செல்வதுதான் எங்களது திட்டம். ஆனால் அதற்குள் பஸ் விபத்தில் சிக்கியதில், எனது மனைவியை இழந்து விட்டேன். அவரது நகைகளை மட்டும் என்னிடம் மீட்டு கொடுத்துவிட்டனர். உயிர் போன பிறகு அதை வைத்து என்ன செய்வது?. எனது செல்போன் உள்பட அனைத்து உடமைகளும் பஸ்சில் இருக்கின்றன. இதனால் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் கூட சொல்ல முடியவில்லை.

இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.


விபத்து ஏற்பட்டது எப்படி?

-பஸ்சை ஓட்டிய டிரைவர் பேட்டி

விபத்தில் சிக்கிய பஸ்சை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் நெட்டூரை சேர்ந்த டிரைவர் முத்து குட்டி(வயது 65) கூறியதாவது:-

ஊட்டியில் இருந்து குன்னூர் வரை கோபால் என்ற மாற்று டிரைவர்தான் பஸ்சை இயக்கி வந்தார். அப்போது கிளட்ச் தேய்ந்து கருகிய வாசனை வர ஆரம்பித்தது. உடனே குன்னூருக்கு பிறகு பஸ்சை நான் வாங்கி ஓட்டினேன். எனக்கு டிரைவிங் தொழிலில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ளது. வழக்கமான வேகத்தில்தான் பஸ்சை இயக்கினேன். ஆனால் திடீரென ஸ்டியேரிங் லாக் ஆகிவிட்டது. அதே நேரத்தில் பிரேக் பிடிக்காமல் போனது. இதனால் எனது கட்டுப்பாட்டை பஸ் இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அதன்பிறகு என்ன நடந்தது? என்பது நினைவில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

200 அடிக்கு செல்லாமல் தப்பியது:


மரத்தில் மோதி நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து நடந்த இடத்தில் 200 அடிக்கு பள்ளம் உள்ளது. அந்த பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 50 அடி ஆழத்துக்கு சென்றபோது, மரத்தில் மோதி நின்றது. இல்லையென்றால், 200 அடி ஆழத்தில் விழுந்து உயிரிழப்பு இன்னும் அதிகரித்து இருக்கக்கூடும். நல் வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்