வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ச்சி

Update: 2023-03-12 18:45 GMT

பென்னாகரம்:

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் வாரவிடுமுறையான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,200 கனஅடியாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். மேலும் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு நடுவே காவிரி ஆற்றில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

தீவிர கண்காணிப்பு

சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்ததால் ஒகேனக்கல்லில் வியாபாரம் களைகட்டியது. குறிப்பாக மீன் வறுவல் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காவிரி ஆற்றில் பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தினர்.

கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததாகவும், இதனால் ஓட்டல்கள், மீன் வறுவல் கடைகளில் விற்பனை களைகட்டியதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்