மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா தினவிழா
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உலக சுற்றுலா தினவிழா களைகட்டியது.;
சுற்றுலா தின விழா
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோவில் வளாகத்தில் உலக சுற்றுலா தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு விழாவுக்கு வந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக பாரம்பரிய, கலாசாரத்தை விளக்கும் வகையில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக சுற்றுலா தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பி.ஏ.எஸ்வந்த்ராவ், மத்திய சுற்றுலாத்துறை தகவல் தொடர்பு அதிகாரி எம்.ஏ.முரளி, மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் எம்.வி.மோகன்குமார் முன்னிலையில், செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வரவேற்பு அளித்தனர்
இந்த பேரணி கடற்கரை சாலை, கிழக்கு ராஜவீதி, கோவளம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. உலக சுற்றுலாதின முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகளுக்கு தமிழக கலாசாரபடி மலர் மாலை அணிவித்து, நெற்றியில் குங்குமமிட்டு சுற்றுலா துறையினர் வரவேற்பு அளித்தனர். அப்போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் சுற்றுலாதின விழாவையொட்டி, அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, பாட்டு போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி என்று போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி நடந்தது. சுற்றுலா துறை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடற்கரையில் சிதறி கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.