தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் மின்விளக்குகள் அமைக்காததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் மின்விளக்குகள் அமைக்காததை கண்டித்து லாரி உரிமையாளர்கள் தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் தினமும் ஏராளமான கனரக வாகனங்களும், இலகுரக வாகனங்களும் சென்று வருகிறது. ஆனால் இந்த நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் ஏதுமில்லை என்பதால் அதிகளவில் விபத்துகள் நடந்து வருவதாகவும், மதுரவாயலில் இருந்து போரூர் செல்லும் சர்வீஸ் சாலை முடிக்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் தலைமையில் மதுரவாயல் பைபாசில் 'டார்ச் லைட்' அடித்தும், தீப்பந்தம் ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போரூர் சுங்கச்சாவடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்பதை கண்டித்தும் லாரி உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையில் 'டார்ச் லைட்' அடித்தும், தீப்பந்தம் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.