ஹார்மோன் குறைபாடு குழந்தைகளுக்கான சிகிச்சையில் தமிழகத்தில் முதலிடம் - அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல்

ஹார்மோன் குறைபாடு குழந்தைகளுக்கான சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை அரசு ஆஸ்பத்திரி முதலிடத்தில் உள்ளது என அரசு ஆஸ்பத்திரி டீன் கூறினார்.

Update: 2023-02-09 21:16 GMT


ஹார்மோன் குறைபாடு குழந்தைகளுக்கான சிகிச்சையில் தமிழகத்தில் மதுரை அரசு ஆஸ்பத்திரி முதலிடத்தில் உள்ளது என அரசு ஆஸ்பத்திரி டீன் கூறினார்.

அகச்சுரப்பியல் துறை

அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் மற்றும் துறைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் அகச்சுரப்பியல் துறையில், கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 59 ஆயிரத்து 823 பேர் வெளி நோயாளிகளாகவும், 790 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு தைராய்டு, உடல்பருமன், உயரக்குறைபாடுகள், பூப்பெய்துதல் பிரச்சினைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆய்வக பரிசோதனைகள் மற்றும் ஹார்மோன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தைராய்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

உயரக்குறைபாடுகள்

இதுவரை 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உயரக்குறைபாடுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சி ஹார்மோன் நோய்க்கான விலை உயர்ந்த மருந்துகள் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஊசி மருந்துகள் உயரக்குறைபாடு குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த 7 வருடங்களில் 120 குழந்தைகள் இந்த சிகிச்சையை பெற்றிருக்கிறார்கள்.

தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்தும், மேல் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன், ரத்த பரிசோதனைகள் மூலம் உயரச்சுரப்பி குறைபாடுகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தொடர் சிகிச்சையில் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மருத்துவக்கல்வி இயக்குனகரத்தின் செயல் ஆய்வில், தமிழத்திலேயே மதுரை அரசு ஆஸ்பத்திரி கடந்த 3 வருடங்களாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்தின் மூலமாக குழந்தைகளின் உயரம் 15 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை வளர்ந்துள்ளனர்.

ஜெர்மனி எந்திரம்

இதுபோல், பூப்பெய்துதல் பிரச்சினைகள், தாடி மீசை தோன்றாத 18 வயது நிரம்பிய ஆண்கள், குழந்தை பேறு இல்லாத தம்பதியினருக்கு சிறப்பு ரத்த ஹார்மோன் பரிசோதனைகள் போன்றவை, ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரத்தில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

தாடி, மீசை வளராத, ஆண்குறி சிறியதாக உள்ள 18 வயது நிரம்பிய ஆண்களுக்கு, காப்பீட்டு திட்டத்தின் மூலமாக டெஸ்டோஸ்டிரைன் ஹார்மோன் ஊசியும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு ஆஸ்பத்திரியின் அகச்சுரப்பியல் துறையானது, திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை அறை எண் 18-ல் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்