பல் பிடுங்கிய விவகாரம்: போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயலிழந்தது எப்படி?- வழக்கு விசாரணையின்போது ஐ.பி.எஸ். அதிகாரி மீது அரசு குற்றச்சாட்டு

பல் பிடுங்கிய விவகாரத்தில் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயலிழந்தது எப்படி? வழக்கு விசாரணையின்போது ஐ.பி.எஸ். அதிகாரி மீது அரசு குற்றம் சாட்டியது .;

Update:2023-10-19 02:07 IST


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்றவர்களை சித்ரவதை செய்து பல் பிடுங்கிய விவகாரத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி காலை 10 மணி முதல் 11-ந் தேதி இரவு 10 மணி வரை பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்க வேண்டும் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தயார் நிலையில் உள்ளது. விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அம்பாசமுத்திரம் போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொறுத்தமட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் உத்தரவுப்படி சம்பவம் நடந்த நாட்களில் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, நெல்லை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்