சூளகிரி பகுதியில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி-பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுவிடும் அவலம்
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, மருதாண்ட பள்ளி, புலியரசி, செம்பரசனபள்ளி சாமன பள்ளி, உத்தனபள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் தக்காளி பல ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. பின்னர் அவை சூளகிரியில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, 30 கிலோ கொண்ட பெட்டிகளில் நிரப்பி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த மாதம் 30 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை, ரூ.1,800 வரை விற்பனையானது. மார்க்கெட்டிலும் தக்காளிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக, ஒரு கூடை தக்காளி வெறும் 150 ரூபாய்க்கு தோட்டத்திலேயே விலை பேசப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் நஷ்டமடைந்து, செலவு செய்த பணம் கூட கைக்கு வரவில்லையே என்று வேதனை அடைந்துள்ளனர். இதனால் தோட்டங்களில் தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். அவை காய்ந்து, உதிர்ந்து கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சொட்டு நீர்ப்பாசனம் மூலம் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட ஆர்வம் காட்டி அதிகளவில் பயிரிட்டு வருவதால், வரத்து அதிகரித்து தக்காளி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.