வரத்து அதிகரிப்பால் பாலக்கோடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி-கிலோ ரூ.4-க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை

Update: 2022-11-29 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.4-க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தக்காளி வரத்து அதிகரிப்பு

பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, பேகரஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 150 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சுழற்சி முறையில் பயிரிடப்பட்டு வருகிறது. இவை அறுவடை செய்யப்பட்டு பாலக்கோடு தக்காளி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இதனை வியாபாரிகள் வாங்கி, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கிறார்கள். இதனிடையே கடந்த சில மாதங்களாக பரவலாக பெய்த மழை காரணமாக பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்தது. இதனால் பாலக்கோடு தக்காளி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.

விலை வீழ்ச்சி

இந்தநிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.45 வரை விலைபோனது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனையாகிறது.

15 கிலோ அடங்கிய தக்காளி பெட்டி ரூ.60 முதல் ரூ.70 வரை மட்டுமே விலைபோவதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில்லறை விற்பனை மற்றும் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோரிக்கை

மேலும் தக்காளி பறிக்கும் கூலி கூட கொடுக்க முடியாததால் பெரும்பாலான இடங்களில் தக்காளிகள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே விடப்பட்டுள்ளன. இதனால் அவை அழுகி வருவதுடன், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகின்றன. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் சில விவசாயிகள் அவற்றை சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.

இதனால் தக்காளியால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்