விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி

இடையக்கோட்டை பகுதியில் விலை வீழ்ச்சியால் சாலையோரம் தக்காளிகளை விவசாயிகள் கொட்டிச்சென்றனர்.

Update: 2023-03-10 21:00 GMT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், பொருளூர், அம்பிளிக்கை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதன்படி, சீசனுக்கு ஏற்றவாறு ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். தற்போது தக்காளியை அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, தரத்திற்கு ஏற்றவாறு ரூ.250 வரை வியாபாரிகளால் வாங்கப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை படிப்படியாக விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரை விலைபோனது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே கள்ளிமந்தையத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்களது தோட்டத்தில் விளைந்த தக்காளியை பறித்து, விற்பனை செய்வதற்காக ேநற்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த தக்காளிகளை சாலையோரமாக கொட்டிச்சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை. பராமரிப்பு செலவு, பறிப்பு கூலி, வண்டி வாடகைக்கு கூட விலை கிடைக்காததால் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனர். இதனால் செடியிலேயே தக்காளி அழுகி வருகின்றன என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்