விலை வீழ்ச்சியால் வீதிக்கு வந்த தக்காளி

சதமடித்து சாதனை படைத்த நிலையில் விலை வீழ்ச்சியடைந்ததால் தக்காளிகள் வீதிக்கு வந்தன.

Update: 2023-08-19 21:30 GMT

வரத்து அதிகரிப்பு

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை ஆனது. இதனால் மகிழ்ச்சியடைந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டினர். இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்தாக தொடங்கியது.

வரத்து அதிகரித்ததால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வெளியூர் வியாபாரிகள் வருகை குறைந்ததால் மார்க்கெட்டில் தக்காளியின் விலை தற்போது கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.1,600-க்கு விற்ற 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ.250 வரையே விற்பனை ஆனது. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்கப்படுகிறது.

வீதிக்கு வந்த தக்காளி

மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகள் தக்காளிகளை டிரைசைக்கிள்கள், சரக்கு வாகனங்களில் எடுத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று 5 கிலோ தக்காளியை ரூ.100-க்கு கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். ஆனாலும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் தக்காளிகளை பறித்து சாலையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சதமடித்து சாதனை படைத்த தக்காளி தற்போது வீதிக்கு வந்துள்ளது.

தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் கடந்த சில வாரங்களாக சமையலுக்கு தக்காளியை பயன்படுத்தாமல் இருந்த குடும்ப தலைவிகள் தற்போது தாராளமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதேபோல் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.100-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முருங்கை வரத்து அதிகரித்ததால் ரூ.7 முதல் ரூ.9 வரை விற்கப்படுகிறது. இதனால் அதனையும் விவசாயிகள் சாலையில் கொட்டி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்