திருச்சி காந்திமார்க்கெட், உழவர் சந்தைகளில் தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை

திருச்சி காந்திமார்க்கெட், உழவர் சந்தைகளில் தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-07-01 19:39 GMT

திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட், உழவர் சந்தைகளில் தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி பற்றாக்குறை

விளைச்சல் குறைவு மற்றும் மழை காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி மொத்த சந்தையிலேயே தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் விலை ரூ.100- முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தன

மேலும் திருச்சி கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் ஒரு கிலோ தக்காளி ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தக்காளியை வாங்கி சென்றதில் 1 மணி நேரத்திற்குள் விற்றுதீர்ந்தது.

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சிந்தாமணி, அமராவதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 550 கிலோ வரை தக்காளி விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழக அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து நேற்று காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் நேற்று காலை காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விலை குறையும்

தக்காளி வரத்து அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் திண்டுக்கல், தேனி, ஓசூர், மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்துள்ளதால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மேலும் திருச்சி உழவர் சந்தைகளில் நேற்று 1 கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. அடுத்து வரும் வாரங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்து தக்காளி வரத்து அதிகரிக்க கூடும் என்றும், விலை குறையும் என்றும் உழவர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்