தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்து நேற்று தர்மபுரி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-08-11 18:45 GMT

தக்காளி வரத்து

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் வெயிலின் தாக்கத்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி விலை 1 கிலோ ரூ.150- ஐ தாண்டியது. தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்ததால் அதை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தும் ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் தக்காளி வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த சில வாரங்களில் தக்காளி சாகுபடி அதிகரித்ததால் சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்தது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு தர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.90-க்கு விற்பனையான தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியது.

மீண்டும் விலை உயர்வு

அதன்படி நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.44-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரித்தது. இதனால் நேற்று தக்காளி விலை கிலோவிற்கு ரூ.11 அதிகரித்தது.

தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.55-க்கு விற்பனையானது. மார்க்கெட்டுகளில் ரூ.65 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை நேற்று மீண்டும் அதிகரித்ததால் தக்காளியை வாங்கும் அளவை பொதுமக்கள் குறைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்